Sunday, October 08, 2006

தீ மூட்டும் ஞாபகங்கள்

ஊர் ஞாபகம் என்றால்
நீமட்டுமே என்பதாகிறது
இன்று வரையிலும்.

கருவேலங்காட்டிலிருந்து
வெட்டிவந்த
முள்ளு மிளறுகளை
கட்டுக்கட்டாக கட்டி
நீ அடுக்கி வைத்திருக்கும் அழகில்
படுத்துத் தூங்கியவன் நான்

கல்லாம்போத்து படித்துறையில்
நீ துணி துவைத்த அழகில்
வெளுத்தது
உன் மீதான என் காதல்

ஏரி வயக்காட்டில்
நண்டு பிடிக்கும்
உன் லாவக கிளுக்கியில்
சிக்கியவன் நான்

ஆம்பளைக்கு சமமாக
பனை ஏறி
இள நுங்கு சீவிக்கொடுத்த
உன்வாங்கு கத்தியின்
கூர்மைச் சுனை நான்

இரவானதும்
மின்விளக்கு வெளிச்சத்தில்
'வெயிலுக்கு வந்தேனே வெட்கமில்லையா'
'காயே கடுப்பங்காய் கஞ்சி ஊத்தி நெல்லிக்காய்'
விளையாடிய நம் விளையாட்டில்
விளையாட்டானது என் காதல்

உன் திருமணத்தன்று
'தப்பு மேளம்' கொட்டியதோடு
முடிந்துபோனது
ஊரில் நான் வாழ்ந்த வாழ்வு

என்றாலும்
ஊர் ஞாபகம் என்றால்
நீ மட்டுமே என்றாகிறது
இன்று வரையிலும்....

நன்றி: புதியபார்வை

1 comment:

Anonymous said...

வணக்கம் வீரமணி

இன்றுதான் உங்கள் எல்லா கவிதைகளும் எனக்கு படிக்க கிடைத்த்து

எல்லாம் மிக அருமை

அதில் எனக்கு இந்த "தீ மூட்டும் ஞாபகங்கள்" மிக நெருக்கமாக உள்ளது

"உன் திருமணத்தன்று
'தப்பு மேளம்' கொட்டியதோடு
முடிந்துபோனது
ஊரில் நான் வாழ்ந்த வாழ்வு"

மனதிற்கு மிக உண்மையாக வாழ விரும்பும் எல்லோருக்கும் வாய்க்கும் இந்த வாக்கியம்