Wednesday, August 23, 2006

நான், மற்றும் என் காதல்...

எச்சில் தொட்டு
நீ அழித்த சிலேட்டின்
அ'ன்னா.. ஆ'வன்னா.. நான்
என்றாலும்
உன் சிலேட்டு அழிக்க
பறித்துக் கொடுத்த
கோவைத்தழையின்
ஈர கசகசப்போடு இருக்கிறது,
அரிச்சுவடி நாட்களின் காதல்..

......
அடுக்குப் பானையிலிருந்து
நீ எடுத்து வரும்
'மாவடு' வின் உவர்ப்பு நான்
என்றாலும்
உனக்காக திருடிய
மாங்காயில் கசியும்
பாலின் பிசுபிசுப்போடு இருக்கிறது..
பாவடை சட்டை நாட்களின் காதல்....

........
நீ பொறுக்கி எடுத்து வரும்
புளியம் பழத்தின்
உடைபடும் ஓடு நான்
என்றாலும்
செட்டியார் கடையில்
புளியம் பழம் கொடுத்து
உனக்காக வாங்கிய
அச்சு வெள்ள இனிப்பின் நசநசப்போடு
இருக்கிறது
உயர்நிலைப்பள்ளி நாட்களின் காதல்....

..............தொடரும்.........

1 comment:

Radha N said...

அருமை!!!

படித்த பாடங்கள் மறந்திருக்கும் ஆனால்
நம்மில் படிந்த நினைவுகள் நிலைத்திருக்கும்
சலனமில்லாமல்!

வாசிக்கும் போது
உயிர்த்தெழும்பும் ஒவ்வொரு நினைவும்.