Wednesday, June 07, 2006

கறுப்புப்பெட்டி

இரட்டை அர்த்ததில்
பேசும் போது
புரிந்து கொண்டாலும்
எதுவும் நிகழாதது போல
பேசிக் கொண்டிருப்பாய்

பார்வையை
சரியாக கணித்துக் கொண்டு
மிக இயல்பாய்
சரி செய்துகொள்வாய்
மேல் தாவணியை

முகம் பார்த்து பேசுகையில்
என் பார்வை தடுமாற்றத்தை
பத்திரப்படுத்திக் கொள்ளும்
உன் கறுப்புப் பெட்டியை
உடைத்துப் பார்க்க வேண்டும்

என்னிடமிருந்து
எதை எதையெல்லாம்
சேமித்து
வைத்திருக்கிறாயென.

Thursday, June 01, 2006

சந்திப்புகள்

சந்தோஷம் தொலைத்த
பொழுதொன்றில்
புறப்படுவேன் உன்னிடம்...

தனிமைகளற்ற நெருக்கடியில்
குலுங்கித் தவிக்கின்றன
உன் வளையல் கரங்கள்

ஒதுங்கி சைகைகளில்
தனிமைப்படுத்துவாய்
சாமி அறைக்குள்

குறுக்கிட்டு அழைக்கும்
யாருடையதோ -
கொலுசுச்சத்தம்

போகட்டுமென அவசரத்தில்
பகிர்ந்து கொண்ட
முத்தத்தின் சுவை
ஞாபகத்தில் இல்லை

உனக்கெப்படியென
கேட்க்கமுடியாது
புறப்படும் அவசியம்
நேருமெனக்கு

உள்ளங்கை அழுந்த
அழுத்திக்கொள்ளும்
மிச்சத்தில்
வாழ்ந்துகொள்வேன்
மறுபடியும் உன்னை
சந்திக்கும்வரை.